Welcome to Jettamil

பலமுறை அழைத்தும் பேசாத பெற்றோர்: கடைக்கதவை உடைத்துப் பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி காட்சி!

Share

பலமுறை அழைத்தும் பேசாத பெற்றோர்: கடைக்கதவை உடைத்துப் பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி காட்சி!

டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கொலை தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிக்கோயா நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தனியாக வசித்து வந்த தம்பதியினரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவியான 82 வயதுடைய சகுந்தலாதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இத்தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்புப் பகுதியில் வசித்து வருவதாகவும், நீண்டகாலமாக வர்த்தக நிலையத்தை நடத்தி வந்த வயோதிப தம்பதியினர், அண்மைக்காலமாக வியாபாரத்தை நிறுத்திவிட்டு அதே இடத்தில் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இனம் தெரியாத நபர் அல்லது நபர்கள் சிலர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து, கூர்மையான ஆயுதங்களால் தம்பதியினரைத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேற்று மாலை, பெற்றோருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளப் பிள்ளைகள் பலமுறை முயற்சித்தபோதும், மறுமுனையில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிள்ளைகள் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் வழங்கி, நேரில் சென்று பார்க்குமாறு கோரியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் வர்த்தக நிலையத்தின் கதவைத் திறந்து பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் ஆங்காங்கே வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை