ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் முதல் முறையாக இன்று, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கூட்டமைப்பை சந்திப்புக்கு அழைத்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பின்னர் காரணம் கூறாமல் அந்த சந்திப்பை ரத்துச் செய்திருந்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் அரசாங்கத்துக்கு அதிகரித்துள்ள நிலையில், கடந்த 15ஆம் திகதி கூட்டமைப்பை சந்திக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தைக் காரணம் காட்டி, அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நடக்கவுள்ள சந்திப்பின் போது பேசப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளக கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையை கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இன்றைய சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று, ரெலோ ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.