பிரதமர் மகிந்த ராஜபக்ச எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார் என்றும், இது தொடர்பில் அவர் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும், பிரதமரின் பேச்சாளர் றொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மகிந்த ராஜபக்ச எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார். அவர் பதவி விலக எந்த காரணமும் இல்லை. அவர் அதை ஒருபோதும் செய்யமாட்டார்.
குறிப்பிட்ட சில ஊடகங்கள் பிரதமர் பதவி விலகுவதாக பொய்யான தகவல்களை பரப்புகின்றன.
ஆனால் அவர் பதவி விலகும் எண்ணம் இல்லை. அவர் தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உடன்பட்ட பிரகாரம் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த பிரதமர் உத்தேசித்துள்ளாரா என வினவியபோது, இடைக்கால அரசாங்கம் இருக்காது என்றும், றொஹான் வெலிவிட்ட பதிலளித்தார்.
எந்த ஒரு கட்சியும் இடைக்கால அரசாங்கத்தில் பதவிகளை ஏற்கவும் பங்கேற்கவும், தயாராக இல்லாதபோது எப்படி இடைக்கால அரசாங்கம் அமையும்?
இடைக்கால அரசாங்கம் இல்லை, அதே அரசாங்கம் தொடரும்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இப்போது இருப்பதைப் போலவே தொடர்வார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரதமர் பதவி விலகப் போவதில்லை என்றும், அதற்கு நேர்மாறாக வெளிவரும் தகவல்கள் அல்லது அறிக்கைகள் தவறானவை என்றும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம், உறுதிப்படுத்தியுள்ளார்.