ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உள்நாட்டு ,வெளிநாட்டு வங்கியாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்ட பிரதமர் நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை, ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமே சமாளிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அதற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் சுமார் 70 நாடுகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அதில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர் சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயமும், சர்வதேச உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.சரியான கொள்கைகளைப் பின்பற்றி முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவது கடினமாகும் எனவும் இதற்கு அதிக காலம் எடுக்கும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அத்துடன் அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் மத்திய வங்கி குறித்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளது.