இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வுக்கு, ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவும் சென்றிருந்தார்.
73 வயதுடைய ரணில் விக்ரமசிங்க நாட்டின் 26 ஆவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
1977ஆம் ஆண்டுடு தொடக்கம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்த ரணில் விக்ரமசிங்க, 2020 நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றி வாய்ப்பை இழந்தார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலமாக அவர், 2021ஆம் ஆண்டு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தார்.
அவர் பிரதமராகப் பதவியேற்பது இது ஆறாவது தடவை ஆகும்.
ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர், 1993ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட ரணில், 1994 வரை அந்தப் பதவியை வகித்தார்.
பின்னர், 2001ஆம் ஆண்டு தொடக்கம், 2004ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாகவும், 2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியதும், மூன்றாவது முறையாகவும், 2015 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நான்காவது முறையாகவும், 2018 ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்த பின்னர், ஐந்தாவது முறையாகவும் அவர் பிரதமர் பதவியை வகித்திருந்தார்.
இதுவரை எந்தவொரு முறையும் பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக வகித்திராத ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான இந்தச் சூழலில் நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
உறுதியான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் இருக்கும் நிலையில் மிகவும் சவாலான பணியை பொறுப்பேற்பதற்கு முன்வந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் உறுதியான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன்“ எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
அதேவேளை, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ரணில் ஒரு மாதம் கூடத் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்