பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 9ஆம் திகதி அலி சப்ரி நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர், நிதியமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை.
பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நாட்டில் , இரண்டு வாரங்களுக்கு மேலாக நிதியமைச்சர் பதவி நிரப்பப்படாமல், இருப்பது மோசமான நிலையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வந்தனர்.
இந்த நிலையில், நிதியமைச்சர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, செயற்படுவார் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நிதியமைச்சராக நியமிக்கும் நோக்கிலேயே இதுவரை அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் தாம் நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரியும், நிதியமைச்சராக பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நிதி அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.