சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்! முச்சக்கர வண்டியை மடக்கிப் பிடித்த பெற்றோர்
மட்டக்களப்பு நகரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற 16 வயது சிறுமியை, நேற்றிரவு 7 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த முச்சக்கர வண்டியை வீதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதன்போது பிரதான சந்தேகநபர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். மயக்க நிலையில் இருந்த சிறுமி உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை மீட்க வந்த மற்றுமொரு இளைஞன், பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, ஆத்திரமடைந்த மக்கள் அவருக்கு நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 21 வயதுடைய பிரதான சந்தேகநபரும் இரவு 11 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





