இலங்கை மின்சார சபை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அட்டவணையை வெளியிட்டுள்ள அதேவேளை, மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மின்வெட்டு அமுல் செய்யப்படாது என்று அறிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடியினால், எரிபொருள் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில், மின்வெட்டு, ஏற்பட்டால், எவ்வாறான நடைமுறை ஒழுங்கின்படி பிரதேச ரீதியாக அமுல் செய்யப்படும் என்ற அட்டவணையை மின்சாரசபை நேற்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைய திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரை, மாலை 5.30 மணி தொடக்கம், 9.30 மணி வரை, நான்கு கட்டங்களாக தலா ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஏ பிரிவுக்கும், 6.30 மணிக்கு, பி பிரிவுக்கும், 7.30 மணிக்கு சி பிரிவுக்கும், டி பிரிவுக்கு 9.30 மணிக்கும் மின்வெட்டு ஆரம்பமாகும்.
மறுநாள், இந்த சுழற்சி முறை பிரிவுகள் ரீதியாக மாற்றமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த அவசர கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் விநியோகத்தை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.
மின்வெட்டு தொடர்பான தகவல்கள் நேற்று மாலை வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்த மின்வெட்டு குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. என்றும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.