நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதாலும், நீர்மின்சார நெருக்கடி காரணமாகவும் தற்போதைய மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவிக்கையில்,தற்போதைய சூழ்நிலையை சமாளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
தற்போது அமுலில் உள்ள 3 மணிநேரம் 20 நிமிட மின்வெட்டை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய கடனுதவியுடன் மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு நான்கு மில்லியன் மெட்ரிக் தொன்களாக அதிகரிக்கவுள்ளது.
எனினும் நாட்டைப் பாதித்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, எரிபொருள் பற்றாக்குறையால் சில பெற்றோல் நிலையங்கள் மூடப்பட்டதுடன், சில இடங்களில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.வடக்கில் கிளிநொச்சியில் பல இடங்களில் பெற்றோல் இல்லாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.