ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை முப்பது நிமிடங்கள் அதிகரித்து, பிற்பகல் 2 மணி வரை நீடிப்பதால் எவ்விதப் பிரச்சினையும் தோன்றவில்லை என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், புதிய சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.
பிற்பகல் 2 மணி வரை பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்குச் சாதகமான பதில்களே அதிகமாகக் கிடைத்துள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும், நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் (National Institute of Education – NIE) பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகமே வடிவமைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





