திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர், காணி ஆணையாளர், மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி நிறுவனம், திருகோணமலை பெட்றோலிய முனைய நிறுவனம் ஆகியன இந்த கூட்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
நேற்றுமாலை இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
இதற்கமைய, திருகோணமலையில், தற்போது லங்கா ஐஓசி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 99 எண்ணெய் தாங்கிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளன.
தற்போது லங்கா ஐஓசி நிறுவனம் பயன்படுத்தும் 14 எண்ணெய் தாங்கிகளும், தொடர்ந்தும், 50 ஆண்டுகளுக்கு அதன் வசம் இருக்கும்.
24 எண்ணெய் தாங்கிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
லங்கா ஐஓசியும் பெற்றோலியக் கூட்டுத் தாபனமும் இணைந்து உருவாக்கும், திருகோணமலை பெட்றோலிய முனைய நிறுவனம், 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தும்.
இந்தப் புதிய உடன்பாடு வரும் 10ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றும், எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு ஜனவரி 11 ஆம் திகதி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.