Welcome to Jettamil

கச்சத்தீவு குறித்த ஸ்டாலின் அறிவிப்பு: இலங்கை அமைச்சர் பதிலடி

Share

கச்சத்தீவு குறித்த ஸ்டாலின் அறிவிப்பு: இலங்கை அமைச்சர் பதிலடி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் விடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு, இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கை மக்களுக்கே சொந்தமானது, இந்திய அல்லது தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அல்ல என்றும், தமிழக அரசியல்வாதிகள் தேர்தலுக்காக இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நேற்று (04.10.2025) ஊடகங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், “தமிழ்நாட்டுச் செய்திகள் கச்சத்தீவு குறித்து வதந்திகளைப் பரப்பி வருகின்றன. தமிழக அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக எங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளட்டும், ஆனால், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக, ‘கச்சத்தீவை மீட்கிறோம்’, ‘கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது’ என்று மீண்டும் மீண்டும் கூறுவதை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அமைச்சரின் சவால்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரடியாகப் பதிலளித்த அமைச்சர், “கச்சத்தீவை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கான இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். சர்வதேசச் சட்டங்களைப் பாருங்கள், மத்திய அரசாங்கமே இதில் கையெழுத்திட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “கச்சத்தீவை வைத்து பிழைப்பு நடத்துபவர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மாறிவிட்டனர். கச்சத்தீவு என்பது இலங்கையில் வாழும் இரண்டு கோடியே இருபது இலட்சம் மக்களுக்குச் சொந்தமானது. இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ சொந்தமானது அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். கச்சத்தீவைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

ஸ்டாலின் வலியுறுத்தல்

நேற்று முன்தினம் (03.10.2025) தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பதுதான் இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்று வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் கச்சத்தீவைப் அரசியலுக்காகப் பயன்படுத்தினால் இருவருக்கும் எதிராகக் கடும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (04.10.2025) எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘கச்சத்தீவை மீட்பேன்’ எனத் தொடர்ந்து அரசியல் மேடைகளில் பேசுவது வடக்குக் கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்து என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை