தமிழக மக்களால் வழங்கப்பட்ட இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட, மனிதாபிமான உதவிப் பொருள் தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதுவர் கோபால் பாக்லே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், நேற்று இந்த உதவிப் பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் கையளித்தார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமரின் பணிக்குழாம் பிரதானிசாகல ரத்நாயக்கா மற்றும் தமிழகத்தின் உணவுத்துறை ஆணையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகளும், கலந்து கொண்டனர்.
9000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இந்த தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை, கடந்த 18ஆம் திகதி, சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.
தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும், 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்த உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.
இதனிடையே, இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பால் மா, அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.’ என்று அதில் கூறியுள்ளார்.