பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த அமைச்சுகளையும் வைத்திருக்கமாட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சையும், விட்டுக்கொடுப்பார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சரவை அதிகபட்சமாக 20 பேருக்குள் மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் 18 அமைச்சர்கள் பணியாற்றுவார்கள்.
ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான அமைச்சுக்கள் ஒதுக்கீடு மற்றும் சில அமைச்சுக்களை இணைப்பது குறித்து, தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.