செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று (14) வள்ளிபுனம் பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா நினைவுரை ஆற்றுகையில்,
செஞ்சோலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது உக்ரென் விமானப்படையினர். இன்று உக்ரென் என்ன ஆகின்றது பாருங்கள், மகிந்த என்ன ஆகின்றார் பாருங்கள். இந்த மக்களின் கண்ணீர் சும்மாவிடப்போவதில்லை. இப்போது தென்னிலங்கையில் தமிழர்களின் தலைகளை கேட்கின்றார்கள்.
முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் எத்தனை தலைகளை கொடுத்தோம் ஆனால் அவற்றை எல்லாம் ஏற்கவில்லை முல்லைத்தீவு போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் உடலங்களைகூட அவர்கள் ஏற்கவில்லை.
2009 ஆம் ஆண்டு எமது போராட்டம்தான் மௌனிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் மௌனிக்கவில்லை நாங்கள் விரும்பி ஆயுதத்தினை தூக்கவில்லை. ஆயுதம் தூக்கவைத்தது இவ்வாறான இனவாத சிங்கள அரசியல் துரோகிகள்.
இந்த அப்பாவி மாணவர்களை திட்டமிட்டு படுகொலை செய்தார்கள் இதேபோன்று இன்றும் திட்டமிட்டு எத்தனையோ தாக்குதல்களை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
இன்று ஒரு கிராமத்திற்கு மூன்று புலனாய்வாளர்கள் இது ஏன் ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் இந்த நாடு நாசமாக போனதற்கு காரணம் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி.
நாங்கள் வடக்கு கிழக்கில் தனிமையாக வாழ்வதற்குத்தான் ஆசைப்படுகின்றோம். சிங்கள தேசம் இதனை புரியவேண்டும் உலக வல்லரசுகள் புரியவேண்டும் இவ்வாறான படுகொலை நிகழ்வுகளை நாங்கள் எங்கள் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக செய்கின்றோம்
எங்களுக்கான களமாடிய மாவீரர்கள் போராளிகளை மதித்து நடக்கவேண்டும். எங்களுக்கான தனித்தமிழீழம் ஒன்று மலரும் என்பதை இந்த நாளில் உறுதியாக கூறிக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.