ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிக் கொள்ளும், கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு நேற்றிரவு அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை விமானப்படை விமானத்தில், நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாலைதீவில் இருந்து நேற்று சவூதியா எயர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று மாலை 7.15 மணியளவில் சிங்கப்பூரைச் சென்றடைந்தார்.
இதையடுத்து, அவர், தனது பதவி விலகல் தொடர்பாக, சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மின்னஞ்சல் மூலம் கிடைத்த பதவி விலகல் கடிதத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து, ஆராய் சபாநாயகர் குறித்த கடிதத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்ததும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பாக, சபாநாயகர் இன்று காலை, நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பின்னர் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியில் இருந்து விலகிய முதலாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு போராட்டங்களை அடுத்து அவர், கடந்த 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.