ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க இன்று காலை தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், உடனடியாக பிரதமர் தற்காலிகமாக ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
எனினும், இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் நடக்கவுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க இன்று தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்பாரா என்பது குறித்து பிரதமர் செயலகம் உறுதிப்படுத்தவில்லை.
அதிகாரபூர்வ பதவி விலகல் கடிதத்துக்காக காத்திருப்பதாக பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகியுள்ள நிலையில், தற்போது கூகுள் தேடுபொறியில், இலங்கை ஜனாதிபதி என ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் காணப்படுகின்றது.