நாடளாவிய ரீதியாக, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோவிட் தொற்றால் பிற்போடப்பட்டது.
இந்தப் பரீட்சை இன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையில், 2 இலட்சத்து 55 ஆயிரத்து 062 சிங்கள மொழிமூல பரீட்சார்த்திகளும், 85,ஆயிரதம்து 466 தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
இன்று காலை 9.30 மணியில் இருந்து 10.30 வரை முதலாவது வினா பத்திரமும், 11.00 மணியில் இருந்து 12.15 மணி வரை இரண்டாவது வினா பத்திரமும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பரீட்சார்த்திகளுக்காக அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், அனுமதி அட்டையின் மேல் பகுதியை பிரித்து வீடுகளில் பாதுகாப்பாக வைத்து விட்டு மற்றைய பகுதியை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு சென்று மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையங்களை இணைப்பதற்காக 496 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக இப் பரீட்சை நிலையங்களுக்கு மேலதிகமாக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விசேட பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்துவதற்காக சுகாதார பிரிவினருடன் இணைந்து சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ், முப்படையினருடைய உதவிகளும் இதற்காக பெறப்பட்டுள்ளன.
தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பெற்றோர்கள் தடை விதிக்க வேண்டாம். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாடசாலை அதிபருடன் அல்லது பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளரோடு தொடர்புகொண்டு அவர்கள் ஊடாக பிள்ளைகளை பரீட்சை நிலையங்களிற்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை நேரகாலத்துடன் மேற்கொள்ளவும்.
இறுதி நோரம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசேட பரீட்சை நிலையங்களுக்கு செல்லுகின்ற பரீட்சார்த்திகள் தொடர்பாக பெற்றோர்கள் துரித அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனையை கட்டாயமாக மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
பரீட்சை நிலையங்களுக்கு வருகை தரும் போது பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தமது பெற்றோர்களோடு நேரடியாக பரீட்சை நிலையங்களிற்கு செல்ல வேண்டும்.
விசேட பரீட்சை நிலையங்களில் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை அறைகளில் அவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
பரீட்சாத்திகள் பரீட்சை நிலையத்திற்கு செல்லும் பொழுது பென்சில், நீலம் அல்லது கருப்பு நிற பேனா, அழிஇறப்பர் மற்றும் இடைவேளையின் போது உண்ணுவதற்கான சிற்றுண்டி ஆகிய பொருட்களை மாத்திரமே எடுத்து செல்ல முடியும்.
வேறு பொருட்கள் பரீட்சை நிலையத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பிள்ளைகளுக்கு தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர்கள் உரிய தரப்பினருடன் அல்லது பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டு பரீட்சை நிலையத்திற்கு அழைத்து செல்லுதல் வேண்டும்.
மாணவர்கள் உள நெருக்கடிக்கு உள்ளாகாத வண்ணம் பெற்றோர்களும் அதிபர் ஆசிரியர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.