ஜனாதிபதி அநுரவுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இறுதிச் சந்திப்பு: விடைகொடுக்கிறது இலங்கை!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகக் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிய ஜூலி சங் (Julie Chung), எதிர்வரும் ஜனவரி 16ஆம் திகதி தனது சேவையை நிறைவு செய்துவிட்டுப் புறப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று (12.01.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தின் போது, அமெரிக்கா ஊடாகத் துரித நிவாரணங்களை வழங்க ஜூலி சங் மேற்கொண்ட ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை பெற்றுக்கொண்ட விசேட ஆதரவு மற்றும் அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதார உதவிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
2022 பெப்ரவரி மாதம் பதவியேற்ற ஜூலி சங், இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலங்களில் ஆற்றிய பங்களிப்பு மற்றும் அமெரிக்க – இலங்கை உறவின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாக்களில் அவரது தலைமைத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜூலி சங்கின் வெளியேற்றத்தை அடுத்து, புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை தூதரகத்தின் பிரதித் தலைவர் ஜெய்ன் ஹவல் (Jayne Howell) தற்காலிகத் தூதுவராக (Chargé d’Affaires) செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.





