தைப்பொங்கல் தினத்தன்று, நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரைத் திடலில் நடத்தப்பட்டு வரும், பட்டத்திருவிழாவை, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து, அரச விழாவாக, இம்முறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சிலர் அமைச்சர் நாமல் ராஜபக்சவை சந்தித்து, இதுகுறித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், பாரம்பரிய பட்டத் திருவிழாவை, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்லப்பட்டமைக்கு, வல்வெட்டித்துறையை சேர்ந்த பொதுமக்களும், புலம்பெயர் வல்வை அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
அத்துடன், அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்துமாறும், கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்தநிலையில், பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பட்டத் திருவிழாவை தற்போதைய சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, கொரோனா தொற்றைக் காரணம் காட்டி,வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.