தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவிட் தொற்று நிலைமை குறித்து தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் நேற்று நடத்திய ஆலோசனைக்குப் பின்னர், புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாநிலம் முழுவதும் இன்று முதல் தினமும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்போது, அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ தொடருந்து என்பன இயங்காது.
அனைத்து பாடசாலைகளிலும் 1 முதல் 9 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து மதவழிபாட்டுத் தலங்களிலும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பொதுமக்கள் வழிபாட்டுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.