வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சிற்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து,
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் வெளிநாட்டவர், கடந்த 6 மாதங்களில் தங்கள் நாட்டில் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
குறித்த வெளிநாட்டவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டாரா, கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளாரா, என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,
புற்றுநோய், எச்ஐவி, மலேரியா, சிறுநீரக பாதிப்பு, ஹெபடைடிஸ் பி, சி அல்லது காசநோய் உள்ளதா என இலங்கை அதிகாரிகளிடம் சுய சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சிவில் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், தேவைப்பட்டால் விவகாரத்து அல்லது விதவை நிலையை உறுதி செய்யும் ஆவணம், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் குறிப்பிடும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.