பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என்ற தகவல்களுக்கு மத்தியில், அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வெளியே, இன்று காலை பெரும் எண்ணிக்கையான அவரது ஆதரவாளர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்த பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளும், கட்சியில் இணைந்த தொழிற்சங்கவாதிகளும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்து பிரதமரை பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்துவதாக உறுதியளித்தனர்.
எனினும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நேற்று அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரீ மஹாபோதிய மற்றும் ருவன்வெலி சயாவிற்கு சென்று வழிபாடு நடத்திய பின்னர், சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் பதவி விலகுவதே அரசியல் முட்டுக்கட்டையை சமாளிப்பதற்கான ஒரே வழி என்று கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதுவே புதிய ஒருவரை நியமிப்பதற்கு வழி வகுக்கும் என கூறியிருந்தார்.
பல அமைச்சர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், அதனை பிரதமர் செயலக ஊடகப் பேச்சாளர் றொகான் வெலிவிட்ட நிராகரித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவையில் புதிய நியமனங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக, பிரதமரின் பதவி விலகல் திட்டம் முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் நாலக கொடஹேவா நேற்று உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் இன்று அல்லது இந்த வாரத்தில் பிரதமர் மகிந்த பதவியில் இருந்து விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை சூசகமாக வெளிப்படுத்தும் வகையில், நாமல் ராஜபக்ச ருவிட்டரில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்தப் பிரதமர் பதவி எனக்குப் பெரிய விடயமல்ல. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அல்லது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் நான் மகிந்த ராஜபக்ச தான்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில், ஆவேசமாக உரையாற்றும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.