ஜீப் மோதி இளைஞர் உயிரிழப்பு: தலவாக்கலையில் நீதி கோரி போராட்டம்
தலவாக்கலை நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஜீப் மோதிய விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்குக் கடும் நீதி கோரி நேற்று தலவாக்கலை நகரில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
விபத்தில் பலத்த காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தலவாக்கலையைச் சேர்ந்த செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
கடந்த தீபாவளி தினத்தன்று இரவு, தலவாக்கலை பேருந்து தரிப்பிடம் அருகில் பிரதான வீதியில் புஸ்பகுமார் உட்பட இளைஞர்கள் சிலர் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த ஜீப் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள்மீது மோதியது. இதில் புஸ்பகுமார் உட்பட இருவர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த புஸ்பகுமார் லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய ஜீப் சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் நுவரெலியாவில் இருந்து அவரது சொந்த ஊருக்கு ஆட்டோக்கள் அணிவகுத்து வர ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
சடலம் தலவாக்கலை நகரை வந்தடைந்ததும், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததையடுத்துப் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற உள்ளன.





