உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த வருடம் அரசாங்கத்தினால் பல்வேறு பொருட்களுக்கு
இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உளுந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவ் இறக்குமதி தடை காரணமாக நாட்டில் உளுந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வந்ததுடன் ஒரு கிலோ கிராம் உளுந்து அதிகபட்சமாக 2000 ரூபாய் வரையில் விற்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் உளுந்த சார் உணவுகளை மக்கள் எடுத்துக்கொள்வதில் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டனர்.
குறிப்பாக தமிழ் மக்களின் பாரம்பரிய உணவாக உளுந்து முக்கிய இடத்தினை வகிப்பதனால் தமிழ் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்.
உளுந்து அதிக அளவில் விளைவிக்கப்படும் வவுனியா உட்பட பல்வேறு இடங்களில் அதிகளவிலான விவசாயிகள் உளுந்து பயிர்ச் செய்கையில் ஆர்வம் காட்டி பயிரிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே விவசாயிகளால் கடந்த சில வாரங்களாக உளுந்து செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் உளுந்துக்கான தட்டுப்பாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
இவ்வாறு உளுந்து உற்பத்தியின் அதிகரிப்பு உளுந்து தட்டுப்பாட்டை குறைத்து, தற்போழுது ஒரு கிலோ கிராம் உளுந்து 800 ரூபாய் வரை குறைவடைந்துள்ளமையினால் நுகர்வோர் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மழை காரணமாக பல்வேறு உளுந்து செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இவ்வாறு உளுந்து விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உளுந்து வடை பிரியர்கள் மற்றும் உளுந்து சார் உணவுகளை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் ஓரளவு மகிழ்ச்சியினை ஏட்படுத்தியுள்ளது.
எனினும்
இறக்குமதி தடைக்கு முந்திய காலங்களில் ஒரு கிலோ உளுந்தின் விலை 300 ரூபாய்க்கு விற்கப்படமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போது இடைத்தரகர்களின் தலையீடு மேலும் உளுந்தின் விலையில் குறைவை ஏற்றப்படுத்துவதில் தடையாக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. விவசாயிகள் உளுந்தை கிலோ ஒன்று 400 ரூபாய்க்கே மொத்தமாக தரகர்களுக்கு விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.