செம்மணி புதைகுழி: AI மூலம் உருவாக்கப்படும் போலிப் படங்கள் தொடர்பில் கடும் எச்சரிக்கை
செம்மணி புதைகுழிகளில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாகக் கொண்டு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது தொடர்பில், அதனைச் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“இவையெல்லாம் தற்போது நீதிமன்ற விசாரணையிலுள்ள ஒரு குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இந்நிலையில், போலி உருவங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்புவது, விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது. இது வழக்கின் திசையையும் மாற்றக்கூடிய ஆபத்தான சூழலை உருவாக்குகிறது.”
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மாற்றப்பட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், வழக்கு திசைதிருப்பப்படும் எண்ணத்துடன் சிலர் செயற்படுகின்றனர் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறான செயல்களைத் தொடர்பவர்கள் மற்றும் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முன்வழிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகின்றது. எதிர்காலத்தில் இது தொடருமாயின், குற்றவியல் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் எனும் காரணத்தின்பேரில் குற்றப் புகார் அளிக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் நீதிமன்ற விசாரணைச் செயல்முறைத் தடைப்படாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.