ஐ.நா சபையின் 46வது மனித உரிமைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் ஈழத் தமிழ் உறவுகளின் படுகொலைக்கு நீதி வேண்டி அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா சபை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸிலுள்ள ஈழத் தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் ஏற்பட்ட சந்திப்பு தொடர்பான தொகுப்பும் இடம்பெற்றது.
மேலும் கொவிட் தொற்று சுவிஸில் உச்சம் பெற்றிருக்கும் நிலையிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.