பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டுல்ல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, குழுவொன்று வீடொன்றில் சூட்சுமமாக நுழைந்து ரூபாய் 50000 க்கும் அதிகமான பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் றோஹண கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – கடந்த செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினர் எனத் தம்மை அடையாளம் காட்டிய ஒர் குழுவினர் வீட்டில் உள்ள சொத்துக்கள் தொடர்பிலான சோதனை செய்வதற்காகவே தாம் இங்கு வந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர் . சிவில் உடையில் வீட்டுக்குள் நுழைந்த குறித்த சந்தேக நபர்கள் ,ரூபாய். 58 ஆயிரம் பணம் மற்றும் 4 செல்போன்கள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் .
இவ் விடயம் தொடர்பாக பியமக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் தற்போது 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது . இந்த விடயம் தொடர்பில் பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .
அத்துடன் விசேட அதிரடிப்படையினர் , குற்ற விசாரணை அல்லது வேறு ஏதாவது விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி வீடுகளில் நுழைந்து கொள்ளையடிக்கும் செயல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன .
இந்நிலையில் இலங்கை பொலிஸிலும் சிவில் ஆடையில் சேவையில் கடமை ஆற்றும் சில பிரிவுகள் உள்ளன . எனினும் இவ்வாறு சேவையில் ஈடுபடும்போது அவர்கள் எப்போதும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை எடுத்துச் செல்வது வழக்கம் . எனவே , இவ்வாறான சந்தர்ப்பத்தில் அடையாள அட்டைகளைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கான உரிமை பொது மக்களுக்கு காணப்படுகின்றது .