மேலும் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ( 20) முற்பகல் வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடலில் ” 15ஆவது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், சமூகத்தில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரையில் 35 ஆயிரம் பேருக்கு தொழில்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது முன்னெடுக்கும் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் முதலாவது நிகழ்ச்சித் திட்டம் நிறைவடைந்த பின்னர் மேலும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும்போது மிகச் சரியான நபர்களை இனங்காண்பது கிராமிய அரச அதிகாரிகளினதும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கூறினார்.
மேலும் நாட்டில் பயிற்றப்பட்ட ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.