அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் பதவி விலகுவதற்கு ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள், அதற்குள் பதவி விலகாவிட்டால், பாரியளவில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி நேற்று நாடு தழுவிய ரீதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்களால் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், மாத்தறை, குருநாகல, கண்டி, அனுராதபுர, சிலாபம், கேகாலை மற்றும் கம்பஹா, கட்டுநாயக்க மற்றும் கொக்கல உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.
மாத்தறை, குருநாகல, கண்டி மற்றும் அனுராதபுர ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் நேற்று அரசாங்கத்துக்கு எதிராக திரண்டனர்.
இந்த நிலையில், மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் இன்னும் 7 நாட்களில் தொடர் தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.