பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நீடிப்பதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவை பிரதமராகத் தொடருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வலியுறுத்தும் நோக்கில் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியினர் மற்றும் அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கையொப்பமிடுமாறு, பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், அழைத்திருந்தார்.
கையொப்பமிடப்பட்ட அந்த ஆவணத்தை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவும், எதிர்பார்த்துள்ளனர்.
எனினும், அந்த ஆவணத்தில் 50க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பங்களை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தம் மீது நம்பிக்கை வைத்து 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடத் தவறினால், பதவியில் இருந்து விலகத் தயார் என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.