முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல விபத்தில் காயம்! கார் மோதியதில் தாயும் குழந்தையும் வைத்தியசாலையில்!
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, நேற்று இரவு (டிசம்பர் 11, 2025) சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் பாரிய விபத்தில் சிக்கியது.
இரவு 7.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் சிக்கியுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் சிறு குழந்தை காயமடைந்துள்ளனர்.
ஜீப் வண்டியில் பயணித்த அசோக ரன்வலவும் காயமடைந்துள்ளார். பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும்,
அசோக ரன்வலவும் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறை பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பில் சப்புகஸ்கந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





