அனைத்துத் தலைவர்களும் ஒழிக்கப்பட்டுவிட்டனர்! – ஈரானுடன் பேச ஆளில்லை என ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் விரும்புவதாகவும், ஆனால் அங்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எவருமே இல்லை எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் கடந்த சில வாரங்களாக நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது அங்கே எவரும் தலைவராக இருக்க விரும்புவதில்லை” என அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் உரிமை கோரினார். குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈரானின் 58 போர்க்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தத் தாக்குதல்களில், ஈரானின் அதியுயர் தலைவர் அலி கமேனி மற்றும் பாதுகாப்புச் செயலர் அலி லாரிஜானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போரில் இதுவரை சுமார் 1,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 150-க்கும் மேற்பட்ட பாடசாலைச் சிறுமிகளும் அடங்குவர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





