திருநங்கை போல் இருக்கேனா? கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் நெத்தியடி பதில்!
பிரபல நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் இளைய மகள் அனந்திதா, தனது உடல் எடை குறைப்பு குறித்தும், தம்மீது வீசப்பட்ட சமூக வலைதள விமர்சனங்கள் குறித்தும் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகப் பேசி நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.
இக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனந்திதா அண்மையில் அளித்த நேர்காணலில், தனது வியக்கத்தக்க உடல் மாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட முக்கிய விபரங்கள் இதோ:
தான் ஒரே நாளில் அல்லது திடீரென உடல் எடையைக் குறைக்கவில்லை என்றும், கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கடின முயற்சி செய்து, சுமார் 7 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகே இந்த உடல் அமைப்பை அடைந்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
உடல் எடையைக் குறைக்கத் தான் எந்தவொரு அறுவை சிகிச்சையோ (Surgery) அல்லது ‘ஓசெம்பிக்’ (Ozempic) போன்ற உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளையோ பயன்படுத்தவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தனது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசுபவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். “என் பெற்றோர் பிரபலங்கள் என்பதற்காக என்னை இழிவுபடுத்தவோ, என் மீது அவதூறு பரப்பவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தன்னை “திருநங்கை போல் இருக்கிறாய்” எனக் கிண்டல் செய்தவர்களுக்குப் பதிலளித்த அனந்திதா, “திருநங்கைகள் மிகவும் அழகானவர்கள் மற்றும் சமூகத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்கள். ஒருவரை இழிவுபடுத்துவதற்காக அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது, அதைச் சொல்பவர்களின் பாரபட்சமான மற்றும் தரம் தாழ்ந்த மனப்பான்மையையே காட்டுகிறது” என்று மிக முதிர்ச்சியான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
பெற்றோரின் அடையாளத்தைத் தாண்டி, தம்மீதான விமர்சனங்களை அனந்திதா தைரியமாக எதிர்கொண்டுப் பேசியுள்ள இந்த நேர்காணல், தற்போது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.





