சாவகச்சேரியில் கோர விபத்து! முச்சக்கர வண்டியில் சென்ற தாயும் மகளும் பலி
சாவகச்சேரியில் கோர விபத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை 8.30 மணியளவில் இந்த அகோர விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டி முற்றாக உருக்குலைந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகியுள்ளனர். முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியைச் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அதிவேகப் பயணமே இந்த விபத்திற்குப் பிரதான காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்தப் பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





