அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தினாலும், இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கும் – நெதன்யாகு அதிரடி அறிவிப்பு
ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது, இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போர் தொடங்கி நான்கு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், ஈரான் இன்னும் வீழ்த்தப்படாத சூழலில் அமெரிக்காவின் இந்தத் திடீர் பின்வாங்கல் தங்களுக்குப் பாரிய பின்னடைவு என இஸ்ரேலிய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்காவை இந்தப் போரில் முழுமையாக ஈடுபடுத்தி ஈரானை நிலைகுலையச் செய்ய வேண்டுமென்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால முயற்சிக்கு ட்ரம்ப்பின் இந்த நகர்வு ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் ஆதரவின்றி ஈரானைத் தனித்து எதிர்கொள்வது கடினம் என்ற போதிலும், இஸ்ரேலிய அரசு தனது பிடிவாதமான போக்கைக் கைவிடத் தயாராக இல்லை என்பதை நெதன்யாகுவின் சமீபத்திய கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
ட்ரம்ப்பின் சமாதான அறிவிப்புக்குப் பதிலளித்துள்ள பிரதமர் நெதன்யாகு, “அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தினாலும், இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.





