காலணிக்குள் மறைத்து வைத்த திறப்பால் நேர்ந்த விபரீதம் – பொலிஸாரால் விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை
கடுவெல, ரணால பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர், வீட்டைப் பூட்டிவிட்டுத் திறப்பினை வாசலில் இருந்த காலணி ஒன்றிற்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், மிக எளிதாகத் திறப்பைக் கண்டெடுத்து வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
வீட்டில் இருந்த பெறுமதியான தங்க நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட உரிமையாளர் நாவகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளின் வசதிக்காகவே திறப்பினை வெளியில் மறைத்து வைத்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வாசற்படிக்கு அடியில், பூந்தொட்டிகளில் அல்லது காலணிகளுக்குள் திறப்பினை வைப்பதைக் கொள்ளையர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இச்சம்பவம் குறித்து நாவகமுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிள்ளைகளுக்காகவோ அல்லது அவசரத் தேவைகளுக்காகவோ திறப்புகளை வெளியில் வைப்பதைத் தவிர்த்து, நம்பகமானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது நவீன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





