மரணத்தை வென்று உயிர்த்தார் இயேசு பிரான்! உலகெங்கும் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும் (05.04.2026). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இதனுடன் கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாகக் கடைப்பிடித்து வந்த தவக்காலமும் இன்றுடன் நிறைவடைகிறது. எருசலேமின் கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, இன்றைய தினத்தில் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்குக் காட்சியளித்ததாக விவிலியம் குறிப்பிடுகிறது.
உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் விசேட “அல்லேலூயா” ஆராதனைகள் நடைபெற்றன. கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், கொட்டாஞ்சேனை புனித லூசியா கதீட்ரலில் பிரதான திருப்பலி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய தேவாலயங்களில் அதிகாலை முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய தினத்தில் மக்கள் எவ்வித அச்சமுமின்றி வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய, நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்குப் பலத்த பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசந்த பெர்னாண்டோ, முப்படை அதிகாரிகளும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.





