வடகொரியாவின் அதிரடி ஏவுகணைச் சோதனை! – கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!
வடகொரியா இன்று (08.04.2026) புதன்கிழமை ஒரே நாளில் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவிச் சோதனை நடத்தியுள்ளது.
இன்று மதியம் 2:20 மணியளவில் வொன்சன் (Wonsan) பகுதியிலிருந்து ஏவப்பட்ட அடையாளம் காணப்படாத ஏவுகணை ஒன்று சுமார் 700 கிலோமீட்டர் தூரம் பயணித்துக் கடலில் விழுந்ததாகத் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் (JCS) உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக இன்று காலையிலும் அதே வொன்சன் பகுதியிலிருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவை சுமார் 240 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்தத் தொடர்ச்சியான ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து, தென் கொரிய ஜனாதிபதி மாளிகையான ‘புளூ ஹவுஸ்’ (Blue House) அவசர தேசியப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந்த ஏவுகணைச் சோதனைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை மீறும் ஒரு ‘ஆத்திரமூட்டும் செயல்’ எனத் தென் கொரியா சாடியுள்ளது.




