திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஹோர்முஸ் நீரிணை மூடல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 14 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
லெபனானுக்கு இந்தப் போர்நிறுத்தம் பொருந்தாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்தே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
லெபனான் மீதான இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைக் கண்டித்து, சர்வதேச எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் உடனடியாக மூடியுள்ளது.
அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
“அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் எவருக்கும் பாதுகாப்பு இல்லை” என ஈரான் எச்சரித்துள்ளதால், திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நீரிணை மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது.





