யாழில் இளைஞன் குத்திப் படுகொலை: கொலையாளி தந்திரமாக வைத்தியசாலையில் தஞ்சமடைந்த நிலையில் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில், நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 27 வயதான குகதீஸ்வரன் மயூரன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒரே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே 2021 ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த நீண்டகாலப் பகைமையே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்தேகநபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
தாக்குதலில் பானுஷன் என்ற இளைஞர் படுகாயமடைந்ததைக் கண்டு, சந்தேகநபரைப் பிடிக்க முயன்ற மயூரனை அவர் கூரிய ஆயுதத்தால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதில் மயூரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்திரமாகத் தப்பிக்க முயன்ற சந்தேகநபர், தனக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
முதலில் விடயம் தெரியாத பொலிஸார் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலைச் சம்பவம் உறுதியானதும், வைத்தியசாலையிலேயே வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





