மழையில் தத்தளிக்கும் இலங்கை: அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!
மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை, அடுத்த 48 மணிநேரத்திற்குப் பின்னரே குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும்.
இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு மிகக்கனமழை எதிர்பார்க்கப்படுவதால், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாளை (15.05.2026) வட மாகாணத்தின் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்யும். எதிர்வரும் 16-ஆம் திகதி வரை இந்த மழையுடனான காலநிலை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





