நிந்தவூரில் திரண்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அனுர ; தனியார் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை
அம்பாறை மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள கலாசார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த நிகழ்விற்குப் புறப்படுவதற்கு முன்னர் மக்களுடன் நேரடியாகச் சென்று சுமுகமாக அன்பைப் பகிர்ந்துகொண்டார்.
இம்முறை ஜனாதிபதியின் இந்த நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்குச் சுதந்திரமாகச் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பட்டியலில் பெயர்கள் இருந்தபோதிலும், நிகழ்விடத்திற்கு வந்த தனியார் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் இந்தத் தடை உத்தரவால், அரச ஊடகங்கள் மட்டுமே முழு நிகழ்வையும் ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தன.





