உதவி செய்த தமிழ் நெஞ்சங்களுக்குக் நன்றி கூறினார் சிவாஜிலிங்கம்!
தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசரச் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது தற்போதைய மருத்துவ நிலையை உணர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் அவரது முதற்கட்ட அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான முழு நிதியையும் திரட்டி வழங்கியுள்ளனர்.
நிதி உதவி கிடைத்ததைத் தொடர்ந்து, தனக்கு மறுவாழ்வு அளித்த தமிழ் நெஞ்சங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அவர் தனது நெகிழ்ச்சியான நன்றிகளைப் பகிர்ந்துள்ளார்.
எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டு நிதியுதவி வழங்கிய உலகத் தமிழ் மக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ள சிவாஜிலிங்கம், தனது சத்திரசிகிச்சை முழுமையாக நிறைவடைந்த பின்னர், சிகிச்சைக்குப் போக மீதமிருக்கும் பணத்தைச் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கும், விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும், அவர்களின் நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், தனக்கு உதவியளித்த நபர்கள் எவ்வித விசாரணை அழுத்தங்களுக்கும் உள்ளாகக் கூடாது என்பதில் தான் கவனமாக இருப்பதாகவும், இன்னும் சிறிது காலம் சென்ற பின்னர், தனது சிகிச்சைக்கு உதவியவர்களின் விபரங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.





