யாழில் வீடொன்றில் கோடி ருபாய் கொள்ளை – 16 வயது சிறுவன் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – கொம்மாந்துறைப் பகுதியில், பூட்டியிருந்த வீடொன்றின் புகைக்கூட்டை உடைத்து 1 கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 16 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகைக் கூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பெருந்தொகை பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டில் பணத்தைக் கண்டதும், நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவருக்கு ‘வீடியோ கோல்’ (Video Call) மூலம் காட்டியுள்ளனர். அவரது அறிவுறுத்தலின்படி, மொத்தப் பணத்தையும் எடுத்துச் சென்று நெடுங்கேணியில் உள்ள காணி ஒன்றில் புதைத்து வைத்துள்ளனர்.
வல்வெட்டித்துறை காவல்துறையினர் CCTV காட்சிகளை ஆய்வு செய்து, கெருடாவில் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை வல்லைச் சந்தி மற்றும் ஆரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 74 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து இயக்கிய நெடுங்கேணியைச் சேர்ந்த முக்கிய நபர் தலைமறைவாகியுள்ளதால், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





