உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று பிறப்பித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையின்போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மேலும் இரு இராணுவ அதிகாரிகள் தொடர்பில் வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





