கலை வெளிப்பாடுகள் ஆயுதவாதத்தை உருவாக்காது! கைதான பாடகருக்கு ஆதரவாக ரஜீவன் எம்பி அதிரடிப் பதிவு!
இலங்கையில் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை உருவாகாது என்றும், விடுதலைப் புலிகள் போன்ற ஆயுத இயக்கங்கள் மீள உருவாவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் கைதான தமிழ் பாடகர் ஒருவரின் விவகாரம் குறித்துத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
சில பாடல்கள் அல்லது கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவை நாட்டில் மீண்டும் ஆயுதவாதத்தைத் தூண்டுகின்றன என்று வாதிடுவது முற்றிலும் யதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு அணுகுமுறையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலை, இலக்கியம் மற்றும் இசை என்பவை மக்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் சமூகப் பிரதிபலிப்புகள் எனச் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ் மக்கள் இன்னும் எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை, மக்களின் இத்தகைய கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து தோன்றுவது இயல்பான ஒன்றுதான் எனக் கூறியுள்ளார்.
எனவே, தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே நிலையான சமாதானத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




