வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடர்! – ஈரான் அணிக்கு விசா வழங்கியது அமெரிக்கா!
அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக, தங்களுக்கு அரசியல் ரீதியாகக் கடுமையான எதிரி நாடாகக் கருதப்படும் ஈரான் அணியின் வீரர்கள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் அனைவருக்கும் தேவையான விசாக்களை அமெரிக்கா தற்போது வழங்கியுள்ளது.
வரும் ஜூன் 15 ஆம் தேதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள தனது முதல் லீக் போட்டியில் ஈரான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த விசா அனுமதி கிடைத்துள்ளது.
எனினும், இந்த விசா முறையைப் பயன்படுத்திப் போலி ஆவணங்கள் மூலம் யாரும் நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, இந்த வாரத் தொடக்கத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய நபர்கள் எவருக்கும் விசா வழங்கப்படாது எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் அணியின் சில வீரர்கள் தங்களின் கட்டாய இராணுவ சேவையின் போது இந்த அமைப்பில் பணியாற்றியுள்ளதால் விசா கிடைப்பதில் பெரும் இழுபறி நீடித்தது.
இதனால், கடந்த மே மாத இறுதியில் அமெரிக்காவின் அரிசோனாவில் அமைக்கப்படவிருந்த தனது பயிற்சி முகாமை ஈரான் அணி மெக்ஸிகோவிற்கு மாற்றியிருந்தது.
நேற்றைய தினம் வரை ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் விசா மறுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும், இது குறித்து ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.





