குருநகரில் சிறப்பாக நடைபெற்ற கலைவிழா
குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றம் நடாத்திய கலைவிழா 08.02.2024வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில், இளையோர் மன்ற தலைவர் செல்வன் விக்டர்குமார் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைகழக கிறிஸ்தவ கற்கைகள் விரிவுரையாளர் அருட்பணி மவி.இரவிச்சந்திரன் அடிகளார் பிரதம விருந்தினராகவும் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகர் திரு ஐயாத்துரை சந்திரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் யாழ் புனித மரியாள் வித்தியாலய அதிபர் திரு கெனத் மேரியன் அவர்களும் புனித யேம்ஸ் மகளீர் பாடசாலை ஓய்வு நிலை உப அதிபர் திருமதி யூஜின் யூலியஸ் அவர்களும் யாழ் நாவாந்துறை றோ.க. வித்தியாலய ஆசிரியர் யூடா சதீஸ் குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 2023ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைகழகத்திற்கு தெரிவான குருநகரை சேர்ந்த மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு இளையோர் மன்றத்திலிருந்து பணியாற்றும் பல்கலைகழக மாணவர்கள் கௌரவிப்பும் தெரிவு செய்யப்பட்ட 30மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும், கவிதைப்போட்டி பரிசளிப்பும் நடைபெற்றது.
தொடர்ந்து கலை நிகழ்வுகளாக
இறைதிட்டம் தேடும் இளையோராக எனும் தொனிப்பொருளில் வில்லுப்பாட்டும், சமூகத்தில் இளையோர் தூண்களா? துன்பங்களா? எனும் தொனிப்பொருளில் பட்டிமன்றமும் , எமது சமூகத்தின் ஊனப்பார்வையை தத்துருவமாக மேடையில் காண்பித்த ஊனக்கண் சமூக நாடகமும் மேடைஏற்றப்பட்டு பலரது பாராட்டை பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் விருந்தினர்கள் பார்வையாளர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர். குருநகர் புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றம் வருடா வருடம் கலையை எதிர்கால சந்ததிக்கு இட்டு செல்லும் நோக்கில் கலைவிழா நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.