நுகேகொடையில் நாளை அரசுக்கு எதிராகப் பேரணி! – மஹிந்த அழைப்பு விடுத்தும் பல முக்கியக் கட்சிகள் ஆதரவு மறுப்பு!
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசுக்கு எதிராகச் சில எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2025) நுகேகொடையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
NPP அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்படுகின்றது.
அத்துடன், அரசின் ஜனநாயக விரோதச் செயல் மற்றும் அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டணி ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பேரணியை நடத்துகிறது.
ஆதரவு மறுத்த முக்கியக் கட்சிகள்:
எதிர்க்கட்சிகள் கூட்டாகப் போராட்டம் நடத்தினாலும், இந்தப் பேரணியில் பங்கேற்க மறுத்துள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள்:
பிரதான எதிர்க்கட்சி: ஐக்கிய மக்கள் சக்தி (SJB)
நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி: இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK)
மலையகக் கட்சிகள்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி
முன்னாள் தலைவர்கள்: விமல் வீரசன்ச, சம்பிக்க ரணவக்க, திலீத் ஜயவீர.
நவீன் திஸாநாயக்கவின் நிலைப்பாடு:
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, இந்தப் பேரணியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தனது எக்ஸ் (X) தளத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ராஜபக்ஷக்களுடன் இனி ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பங்கேற்கும் கட்சிகள்:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும், அவற்றுக்குச் சார்பான அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மாத்திரமே இதில் பங்கேற்கவுள்ளன.





